முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
Central-government 2021 12-

சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயாராகி வருகிறார்கள்.

இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், துணை ராணுவ படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்ட திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத செயல்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக உளவு பிரிவு போலீசார், மாநில சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துறையினர் ஆகியோர் மிகவும் உஷாராக செயல்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் பணிகளில் வேகம் காட்டியுள்ளனர்.தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் "ராமேசுவரம் கபே" ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னையில் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் 4 நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்த இருவரும் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டிய தகவலை அடுத்தே தமிழகத்தில் உஷார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக உளவு பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அடுத்த 3 வாரங்கள் தேர்தல் களம் களை கட்டி காணப்படும். இதனால் தேர்தல் களம் இப்போது இருப்பதைவிட பரபரப்பாகவே காட்சி அளிக்கும். இதனை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களிலும், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து