முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி உயிருக்கு ஆபத்து?

புதன்கிழமை, 22 மே 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 08 11

Source: provided

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (மே.21) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற வெளியேற்ற போட்டியில் (எலிமினேட்டர்) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த நிலையில், போட்டிக்கு முன் நிகழும் பயிற்சியில் பெங்களூரு அணி கலந்துகொள்ளவில்லை. அதற்கான, காரணம் குறித்து வெளியாகாமல் இருந்தது. தற்போது, பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குஜராத் காவல்துறை தெரிவித்ததால்தான் பெங்களூரு அணி பயிற்சியை தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன், அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபின்பே காவல்துறை இந்த எச்சரிக்கையை பெங்களூரு அணி நிர்வாகத்திடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

______________________________________________________

மருத்துவமனையில் ஷாருக்கான் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடல் உச்ச வெப்பநிலையால் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தனது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் செவ்வாய்க் கிழமையன்று அகமதாபாத் சென்று இருந்தார்.

நடிகர் ஷாருக்கான் உடல் உச்ச வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு கே டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

______________________________________________________

கொல்கத்தா அணி சாதனை 

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் (குவாலிபயர் 1) ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 17 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 4-வது முறையாகும். 

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளின் சாதனை பட்டியலில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா 3-வது இடம் பிடித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 முறையுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த பட்டியல்:- 1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 10 முறை, 2. மும்பை இந்தியன்ஸ் - 6 முறை, 3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 முறை,  4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 3 முறை. 

______________________________________________________

விஜய் மல்லையா கணிப்பு

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருப்பதாவது, “நான் பெங்களூரு அணியின் உரிமத்தையும்,  விராட் கோலியை ஏலத்தில் எடுத்த போதும் இதைவிட சிறந்த தேர்வுகளை செய்திருக்க முடியாது என்று எண்ணினேன்.  இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக என் உள்ளுணர்வு கூறுகிறது.  முன்னேறிச் செல்லுங்கள், வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது ஆர்சிபி அணியை மல்லையா வாங்கினார்.  இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் நாட்டைவிட்டு மல்லையா தப்பிச் சென்ற பிறகு அணியின் உரிமையாளர் மாறியது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________

ரத்தன் டாடாவுடன் சச்சின் 

51 வயதானவர் சச்சின் டெண்டுல்கர். கடந்த 1989 முதல் 2013 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதன் மூலம் 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மொத்தம் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். அண்மையில் ரத்தன் டாடா மற்றும் சச்சின் டெண்டுல்கர் என இந்த இரண்டு ஆளுமைகளும் சந்தித்துள்ளனர். அது குறித்து சச்சின் தெரிவித்தது. “மறக்கமுடியாத உரையாடலாக இது அமைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்தன் டாடாவை சந்தித்தேன். அவருடன் நேரம் செலவிடும் வாய்ப்பும் கிடைத்தது.

நாங்கள் இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசிக் கொண்டோம். வாகனங்கள், சமூகத்துக்கான பணி, வனவிலங்கு சார்ந்த எங்களது ஆர்வம் மற்றும் செல்லப்பிராணிகள் மீது நாங்கள் கொண்டுள்ள நேசம் குறித்து பேசினோம். இந்த வகையிலான உரையாடல் விலைமதிப்பற்றது. இந்த நாளை நினைத்துப் பார்த்தால் என் முகத்தில் புன்னகை பூக்கும்” என சச்சின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

______________________________________________________

யுவராஜ் சிங்கின் ஆடும் லெவன்

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. 

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஐ.சி.சி இணையத்தில் பேசியதாவது, கண்டிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி தம்முடைய 3வது இடத்தில் விளையாட வேண்டும். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ஆட வேண்டும். 5வது இடத்தில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக நான் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுப்பேன். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்க வேண்டும். தொடர்ந்து ஷிவம் துபே, யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

______________________________________________________

கோலி குறித்து பாண்டிங் கருத்து

இந்தியாவில் வேண்டுமென்றே ஏதேனும் காரணத்தை சொல்லி விராட் கோலியை கழற்றி விடுவதற்கு பலரும் முயற்சிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி போன்ற தரமான வீரர் டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத காரணத்தால் இந்திய தேர்வுக் குழுவினர் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஜெய்ஸ்வாலை ஓப்பனிங்கில் களமிறக்கும் முடிவையும் எடுத்திருக்கலாம். ஆனால் ரோகித் சர்மாவுடன் அவர்கள் விராட் கோலியை ஓப்பனிங்கில் விளையாட வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி பற்றி ஒரு வேடிக்கையான விஷயம் உள்ளது.

இந்தியாவில் உள்ள பலர் அவரை கழற்றி விடுவதற்காக ஒரு காரணத்தை தேடுகின்றனர். ஆனால் என்னை பொறுத்த வரை அவர்தான் இந்தியா தேர்வு செய்வதற்கான முதல் வீரர். அவர் டாப் ஆர்டரில் தன்னுடைய வேலையை செய்வார். அவரைச் சுற்றி நீங்கள் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா போன்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த வீரர்கள் அவர்களுடைய வழியில் விளையாடுவார்கள். ஐ.சி.சி. இணையத்தில் இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பற்றி நான் ஏற்கனவே சில உரையாடல்களை பேசியுள்ளேன். பெரிய போட்டிகள் வரும்போது அவரை போன்ற வீரர்கள்தான் வேலையை செய்து முடிக்கக் கூடியவர்கள். கிளாஸ் மற்றும் அனுபவம் ஆகியவற்றை உங்களால் எதையும் வைத்து மாற்ற முடியாது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து