முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியாணாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு சிக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கவர்னருக்கு ஜே.ஜே.பி. கடிதம்

வியாழக்கிழமை, 9 மே 2024      இந்தியா
Haryana

சண்டிகர், அரியாணாவில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கும் ஜனநாயக ஜனதா கட்சி, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி கவர்னருக்கு கடிதம் எழுத்தியிருக்கிறது.

அரியாணாவில் பா.ஜ.க. அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவளிக்க தயார் என்று பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) புதன்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், அரியாணாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கவர்னரை சந்திக்க காங்கிரஸ் கட்சி நேரம் கேட்டுள்ளது.

அரியாணா பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் காரி ஜனநாயக ஜனதா கட்சி கவர்னருக்கு கடிதம் எழுதியிருப்பதால், ஆளும் பா.ஜ.க. அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரியாணாவில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றனர். இதன் காரணமாக, பா.ஜ.க. அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸை ஆதரிக்க தயாராக உள்ளதாக ஜேஜேபி தெரிவித்திருந்தது.

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியாணா பேரவையில் தற்போது 88 எம்எல்ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 40, காங்கிரஸுக்கு 30, ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்திய தேசிய லோக் தளம், அரியாணா ஹோகித் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளனர். இதுதவிர 6 சுயேச்சைகள் உள்ளனர்.

அரியாணாவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜேஜேபி கடந்த மார்ச் மாதம் விலகிய நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. இந்தச் சூழலில், பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, சோம்பீர் சங்வான், ரண்தீர் சிங், தரம்பால் கோண்டர் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். அத்துடன், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பா.ஜ.க.வுக்கு தற்போது 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் 2 இடங்கள் பா.ஜ.க.வுக்கு குறைவாக உள்ளன. அரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அங்கு திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரியாணா பேரவையின் பதவிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து